புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், வழக்கு தொடர்ந்தவர் விசாரணையை ஒத்திவைக்கும்படி தொடர்ந்து கூறியதால், அவர் நீதிமன்ற உத்தரவுப்படி ராகுலுக்கு வழக்கு செலவு தொகையாக ரூ.1,500 அனுப்பினார்.
கடந்த 2014-ம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் தானே பிவாண்டி டவுன்ஷிப் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்றார்.
இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, உள்ளூர் ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஷ் குன்டே என்பவர் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வந்தபோது, அதை ஒத்திவைக்கும்படி ராஜேஷ் குன்டே கூறினார். இதனால் அவர், ராகுலுக்கு வழக்கு செலவு தொகையாக ரூ.1,500 செலுத்தும்படி பிவாண்டி நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜே.வி.பாலிவால் உத்தரவிட்டார். அதன்படி ராகுலுக்கு, ராஜேஷ் குன்டே மணி ஆர்டர் மூலம் ரூ.1,500 அனுப்பி வைத்தார்.