அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை ஊடாக மக்களை மையமாகக் கொண்டு, இந்திய அரசால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் அதேநேரம், இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பல்வேறு மனிதாபிமான உதவித்திட்டங்களால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் இந்தியா நேரடியாக ஈடுபடுகின்றது.
2. 2022 ஏப்ரல் 27ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் விதவைகள் மற்றும் ஏனைய பல்வேறு குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரணப் பொதிகள், இரண்டாம் நிலை செயலாளர் அஷோக் குமார் அவர்களால் வழங்கப்பட்டது. இந்த விசேட நிகழ்ச்சித் திட்டமானது முஸ்லிம் யுவதிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. ஈகைத் திருநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் முகமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
3. அத்துடன் 2022 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று வெலிகம்பிட்டியவில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலயத்தைச் சேர்ந்த திருச்சபையைச்சேர்ந்த குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ரேவந்த் விக்ரம் சிங் அவர்களால் வழங்கப்பட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும். இதேபோல புதுவருடத்தை முன்னிட்டு புனித நகரான அனுராதபுரத்திலுள்ள மடவேவா மற்றும் கிரிமெட்டியாவ, அத்துடன் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கிரிய பகுதிகளில் உள்ள ஆறு கிராமங்களிலும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
4. இந்த விசேட மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டமானது 2022 மார்ச் 13 ஆம் திகதி உயர் ஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில், உயர் ஸ்தானிகர், மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள், 600 மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கையளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள மீனவர்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
5. இலங்கையில், நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சவால்களை எதிர்கொண்டுள்ள மக்களின் அன்றாட வாழ்வில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக கண்டியில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் ஆகியவையும் இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
29 ஏப்ரல் 2022