உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் உறுதி ஏற்போம் – இந்திய தேசிய லீக்.!

உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் உறுதி ஏற்போம் என்று, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த வாழ்த்துச்செய்தியில், “மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

மக்கா, மதீனா சென்று தர்மம் செய்ய இயலாதவர்கள், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து தர்மம் செய்வது அதற்கு சமமாகும், “செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமென”, வாழ்க்கை நெறிகளை அண்ணல் நபிகள் பெருமான் இஸ்லாமிய பெருமக்களுக்கு கூறியுள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் சாந்தியும், சமாதானமும் நிறைந்திருக்கும்.

இறைவன் அருளிய திருமறையில் உள்ள இத்தகைய அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது. 

அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர். இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த மணி வாசகங்களை மனதில் பதித்து, எளியோர்க்கு ஈந்து நோன்புக் கடமைகளை நிறைவேற்றி, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் ஆகியவற்றை தவிர்ப்பு, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.”

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.