கோவிட் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இதற்கான தடை இப்போது அகற்றப்பட்டதால் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நியூசிலாந்துக்கு வருகை தருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல நாடுகளிருந்து வரும் தங்கள் உறவினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நியூசிலாந்து மக்கள் இனிப்புகள் கொடுத்து நெகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் வரவேற்று வருகின்றனர். கோவிட் தடுப்பூசிகளை சரியான முறையில் எடுத்துக் கொண்டவர்கள் மற்றும் கோவிட் நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று குறிப்பிட்டுள்ளது நியூசிலாந்து அரசு.
இந்நிலையில் இன்று நியூசிலாந்தில் உள்ள 43 சர்வதேச விமானங்களில் கிட்டத்தட்ட 9000 பயணிகள் வரவுள்ளதாக ஏர் நியூசிலாந்து கூறியுள்ளது. மேலும் ‘குடும்பத்துடன் மீண்டும் இணையவும், படிப்பைத் தொடங்கவும், தொழில்களை உருவாக்கவும் இங்கு வருபவர்கள், மீண்டும் நியூசிலாந்து கடற்கரையில் இறங்குவதால் மகிழ்ச்சி அடைவார்கள். சர்வதேச சுற்றுலாப் பயணிகள் எங்கள் அழகான நாட்டிற்கு மீண்டும் வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளது ஏர் நியூசிலாந்து.
இது பற்றிக் கூறிய நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern), “உலகத்தை மீண்டும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். தற்போது கோவிட் தொற்று சற்று குறைந்து வருவதால் நீண்ட நாள்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.