கோவிட் நோய்த்தொற்றின் போது, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியதால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவித்தன. அதன்படி ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் அலுவக வேலைகளைச் செய்தனர். தொற்றின் தீவிரம் குறைந்தபோது, பல நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் அலுவகத்தில் வந்து பணிபுரியுமாறு அழைத்தன. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதையே விரும்புவதாகச் சொல்லி, அலுவலகத்திற்கு திரும்புவதில் சுணக்கம் காட்டி வந்தனர். ஆனாலும் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய வலியுறுத்தின.
இந்நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க, ஊழியர்களின் விருப்பத்திற்கு தீர்வளிக்கும் வகையில், நியூஸிலாந்தில் உள்ள மென்பொருள் நிறுவனமான (Actionstep) ஊழியர்களுக்கு காலவரையற்ற ஆண்டு விடுப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
ஊழியர்கள் தங்களுக்கு தேவையான விடுமுறையை எடுத்துக்கொண்டு, பின்னர் அலுவலகத்திற்கு வரும்போது சிறப்பாக வேலை செய்ய இந்த விடுப்பு வழிவகுக்கும். இந்த முறையை `ஹை டிரஸ்ட் மாடல்’ என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்டீவி மேஹூ தெரிவித்துள்ளார்.
அன்லிமிட்டடு விடுமுறை என சொன்னாலும் ஊழியர்கள் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மகப்பேறு கால விடுப்பு, அவசர கால விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற அனைத்து நாள்களையும் கொண்டதே இந்த விடுமுறை. பல நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாள்களை மட்டும் வேலை நாள்களாக கடைப்பிடித்து வருகின்றன. சிறப்பான இந்த முறையை மற்ற நிறுவனங்களும் பின்பற்றலாம் என மேஹூ தெரிவித்துள்ளார்.