ரமலான்’’ திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் “ரமலான்’’ திருநாளில் எங்கள் உளங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் எங்கள் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், எங்களது இதயம் கனியத ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.”
இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.