கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் இரண்டு ராப்டர் வகை படகுகளை டிரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 2 மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று அதிகாலை கருங்கடலின் பாம்பு தீவுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரஷ்ய படகுகளை துருக்கியில் தயாரிக்கப்பட்ட தங்கள் நாட்டின் Bayraktar என்ற டிரோன் மூலம் தாக்கி அழித்ததாகவும், அதில் படகுகள் மூழ்கிவிட்டதாகவும் உக்ரைன் ராணுவத்தின் மூத்த அதிகாரி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.
அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட ராப்டர் வகை படகில் 23பேர் வரை பயணிக்க முடியும் என்ற நிலையில், தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்படும் படகுகளில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும், ரஷ்யா தரப்பில் விளக்கமோ, மறுப்போ இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.