காரைக்கால்: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என புதுச்சேரி முதல்வரிடம் திமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.நாக தியாகராஜன் ஆகியோர் இன்று (மே 2) புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ”மு.கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தது போல, புதுச்சேரி மாநிலத்திலும் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட அறிவிப்பு வெளியிட வேண்டும்.
புதுச்சேரி குறித்து கருணாநிதி குறிப்பிடும் போதெல்லாம் தமிழ்நாடு அடுப்பு என்றால் புதுச்சேரி மாநிலம் கொடி அடுப்பு எனக் குறிப்பிடுவார். புதுச்சேரி மாநிலம் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். தானே புயலால் புதுச்சேரி மாநிலம் பாதிக்கப்பட்ட சமயத்தில், பாதிப்புகளை பார்வையிட்டு திமுக மூலம் நிவாரண நிதி வழங்கியவர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் பேசும்போதெல்லாம், புதுச்சேரி மாநிலத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய காரைக்காலுக்கு உரிய பங்கு வந்து சேர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.
தமிழக பாடநூல்களில் புதுச்சேரி மாநில வரலாற்றையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கான ஒப்புதலை தந்தவர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தச் சூழலில் தமிழக அரசு அறிவித்தது போல, புதுச்சேரி மாநிலத்திலும் கருணாநிதி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் வகையில் உரிய அறிவிப்பை செய்ய வேண்டும் என காரைக்கால் திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு நட்பும் பாலமாக அமையும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ. எல்.சம்பத் உடனிருந்தார்.