கொரோனா பாதிப்பு, ரஷ்யா – உக்ரைன் போர், சப்ளை செயின் பாதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்திய உற்பத்தித் துறை போராடினாலும் வேகமாக மீண்டு உள்ளது. இதன் எதிரொலியாக ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்கு பெரிய அளவிலான பலன் கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி அளவு குறையும் என்று சில கணிப்புகள் வந்தாலும், கடுமையான டிமாண்ட் இருந்த காரணத்தால் பல பொருட்களின் விலை உயர்ந்தும் வர்த்தக அளவுகள் சரியாமல் ஜிஎஸ்டி வரி வசூல் வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்யும் அபுதாபி அரசு நிறுவனம்.. வாவ்..!

ஜிஎஸ்டி வருவாய்
ஏப்ரல் 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் புதிய வரலாற்று உச்ச அளவை அடைந்து சாதனைப்படைத்துள்ளது. ஏப்ரல் மாதம் மட்டும் மத்திய அரசு ஜிஎஸ்டி கீழ் சுமார் 1,67,540 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் முதன் முறையாக ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2022 அளவீடு
இதற்கு முன்பு மார்ச் 2022 இல் அதிகபட்ச வசூல் அளவான ரூ. 1,42,095 கோடியை விட தற்போது சுமார் ரூ. 25,000 கோடி அதிகம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது , வருவாய் 20 சதவீதம் அதிகம்.

3 ஜிஎஸ்டி பிரிவு
இந்த 1.67 லட்சம் கோடி ரூபாயில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ரூ.33,159 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.41,793 கோடியாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) ரூ.81,939 கோடியாகவும் (ரூ.36,705 கோடி இறக்குமதி பொருட்களின் மீது வசூலிக்கப்பட்டுள்ளது) மற்றும் செஸ் பிரிவில் ரூ. 10,649 கோடி (இறக்குமதி பொருட்களின் பிரிவில் ரூ. 857 கோடி) பெற்றுள்ளது மத்திய அரசு.

மொத்த வருவாய் பங்கீடு
மத்திய அரசு ஏற்கனவே ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.33,423 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.26,962 கோடியும் செட்டில் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வரி பகிர்வுக்குப் பின்பு 2022 ஏப்ரலில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய், சிஜிஎஸ்டிக்கு ரூ.66,582 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.68,755 கோடியாகவும் உள்ளது.

இ-வே பில்
மார்ச் 2022 இல் மொத்த இ-வே பில்களின் எண்ணிக்கை 7.7 கோடியாகும், இது பிப்ரவரி 2022 மாதத்தின் 6.8 கோடி இ-வே பில் எண்ணிக்கை விடச் சுமார் 13 சதவீதம் அதிகம். இதன் மூலம் இந்தியாவில் வர்த்தக எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது தெரிகிறது.

ஒரு நாள், ஒரு மணிநேர சாதனை
மேலும் ஏப்ரல் 2022ல் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு வரி வசூல் – 20 ஏப்ரல் 2022 ஆம் தேதி 9.58 லட்சம் ஜிஎஸ்டி பேமெண்ட்கள் மூலம் ரூ. 57,847 கோடி வரி வசூல் பெறப்பட்டு உள்ளது. இது தவிர, 2022 ஏப்ரல் 20 அன்று மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டும் கிட்டத்தட்ட 88,000 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 8,000 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.

PMI குறியீட்டு
ஜிஎஸ்டி வரி வசூல் அளவுகளை உறுதி செய்துள்ளது இன்று வெளியான உற்பத்தி PMI குறியீட்டு அளவு. ஏப்ரல் மாதத்திற்கான IHS மார்கிட் குறியீடு அளவு 54.7 ஆக உள்ளது. இது மார்ச் மாதம் 54.0 ஆக இருந்தது. இந்த வளர்ச்சி மூலம் உற்பத்தி துறை வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் ஜிஎஸ்டி வரி வசூல் அளவில் ஏற்பட்ட உயர்வையும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
GST revenue clocked all time high in April; Manufacturing PMI rose to 54.7
GST revenue clocked all time high in April; Manufacturing PMI rose to 54.7 கல்லாகட்டிய மத்திய அரசு.. ஏப்ரல் மாதம் வேற லெவல் வருமானம்..!