வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-உலக அளவில் கல்வி நிறுவனங்கள் மீதான, ‘சைபர்’ எனப்படும் இணைய வழி தாக்குதல்கள் இந்தியாவிலேயே அதிகம் நடந்துள்ளது என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் காலத்தில் கல்வி நிறுவனங்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக பாடங்களை நடத்தின.
இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான ஆன்லைன் தளங்கள் மீதான சைபர் குற்றம் எனப்படும் இணைய வழித் தாக்குதல் அதிகரித்துள்ளது.முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் இணைய வழித் தாக்குதல், 20 சதவீதம் அதிகரித்துள்ளது
.கடந்தாண்டில் பதிவான இணைய வழி தாக்குதல்களில் இந்தியாவிலேயே மிகவும் அதிகமான அளவு நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, பிரேசில் ஆகியவை அதற்கடுத்த இடங்களில் உள்ளன.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடந்த தாக்குதலில், 58 சதவீதம் இந்திய நிறுவனங்கள் மீதே நடந்துள்ளன. அதற்கடுத்து, இந்தோனேஷியாவில், 10 சதவீதம் நடந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement