`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்'- ஜெயக்குமார் காட்டம்

`திமுக அமைச்சர்களிடமும் நிர்வாகிகளிடமும் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஜனநாயகவாதிகள் அல்ல, ஜமீன்தார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றுவார்கள்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
“அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதுமட்டுமா? எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது, பழமையான கிழக்கு கடற்கரை சாலைக்கு ஏன் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும்? காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும் மக்களுக்கு தெரிந்த புகழ்பெற்ற சாலை ஈசிஆர் சாலை. அப்படிப்பட்ட இடத்துக்கு ஏன் பெயர் மாற்ற வேண்டும்? கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு எனக்கூட மாற்றிவிடுவார்கள். இருந்தபோதிலும் மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்தக்கூடாது என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
image
தமிழ்நாட்டை பொறுத்தவரை மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தான் நிழல் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்கள். கனிமொழிக்கு எந்த வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் கொடி கட்டிய நபர் கூட பதவியில் அமர முடியும். ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா?
தமிழ்நாட்டில் துணை ஆணையர்கள், செயலாளர்களை திமுகவின் அமைச்சர்கள் ஒருமையில் பேசுகிறார்கள். திமுக அமைச்சர்களிடம் நிர்வாகிகளிடமும் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஜனநாயகவாதிகள் அல்ல, ஜமீன்தார்கள். அவர்களின் அரசியல் ஜமீன்தார் அரசியல். நாங்கள் அதிகாரிகளை மதிப்போம். இதனால் தமிழக மக்கள் திமுகவின் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது.
image
தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் எப்போதும். ஆங்கிலம் தான் இணைப்பு மொழி. திமுக வேண்டுமானால் நாடகம் போடலாம். திமுக உண்மையில் மும்மொழிக் கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறார்கள். திமுகவின் கொள்கை விளக்கங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுவது ஏன்? பள்ளிக் கல்வித் துறை தூங்கி கொண்டிருக்கிறதா? திமுக ஆட்சிக்காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதியதை யாராலும் மறக்க முடியாது. அதே போன்று தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை விழிப்போடு இருந்தால் மாணவிகள் சண்டைபோல் பிரச்சனைகள் வராது. அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் வருகின்றன. இது கவலைக் கொள்ள வேண்டிய விஷயம். ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்துவிட்டு காயத்திற்கு மருந்து போடுவது போன்று உள்ளது திமுகவின் அறிவிப்பு” என்று பேசினார்.
சமீபத்திய செய்தி: தாங்க முடியாத வெயில்… கோயம்பேடு, உதகை சந்தைகளில் பழங்கள் விலை கிடுகிடு உயர்வுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.