கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி!!

டெல்லி: எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  2021 ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயமாக்கி உள்ளன. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என பல மாநில அரசுகளின் உத்தரவுக்கு எதிராகவும் இதனை, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் கிஷோர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ‘எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி இயக்கம் குறித்து, தனிக் கொள்கை முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற மாநில, மாவட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாடுகளை நீக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறோம்.,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி பயன்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேசிய தடுப்பூசி ஆலோசனை  குழுவின் முன்னாள் உறுப்பினர் தொடர்ந்த வழக்கிலும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், ‘தடுப்பூசி பயன்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். தனி மனித உரிமை பாதிக்காதவாறு ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்,’என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.