சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையைக் கண்டறிய 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார் பாஜக தலைவர் அண்ணாமலை.
இலங்கை மலையக வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ ஏற்பாடு செய்த மே 1- உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை இந்த உலகமே வியந்து பார்க்கிறது. உலகளவில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. உக்ரைனில் போரினால் பாதித்த பகுதியிலிருந்து இந்தியர்கள் ஒருவரைக் கூட விடாமல் பிரதமர் மோடி பத்திரமாக மீட்டெடுத்தார். இலங்கை, எங்களின் அண்டைநாடு. இங்கு வாழும் மக்கள் எம் சொந்தங்கள். அதனால் தான் நாங்கள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறோம். மலையக மக்களுக்கான இந்தியாவின் உதவி இனியும் தொடரும். இங்குள்ள மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
இலங்கையில் இப்போதைய பொருளாதர நெருக்கடி நீண்டகாலம் நீடிக்காது. இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும் என நான் இறைவனை வேண்டுகிறேன். இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் ” என்றார்.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொடங்கிய சவுமியமூர்த்தி தொண்டைமான், மலையக தமிழருக்கு மட்டுமல்ல தமிழக தமிழருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று புகழ்ந்து பேசினார். சவுமியமூர்த்தி குரல் அற்றவர்களின் குரலாக ஒலித்தவர். அவர் வழியில் வந்த ஆறுமுகம் தொண்டைமானும் மக்கள் உரிமைகளுக்காகப் போராடினார் என்று பாராட்டிப் பேசினார்.
தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பின்னர் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து பாஜக தலைமையகத்துக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறார் அண்ணாமலை.
பயணமும் பின்னணியும்: இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தது. ஆனால், 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பாலும், அதன் பின்னர் வந்த கரோனா பெருந்தொற்றாலும் அங்கு சுற்றுலா பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் அதைவிடவும் முக்கியமானது, பட்ஜெட்டுகளை மிகப்பெரிய பற்றாக்குறைகளுடன் நிறைவேற்றிய அதிபரின் திறமையின்மையும் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் யார் பேச்சையும் கேட்காமல் பல்வேறு வரிவிதிப்பிலும் சலுகை வழங்கியதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கியில் சிக்கியிருக்க நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு கடந்த மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவி வழங்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. மேலும், 760 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்களை வழங்கி உதவியுள்ளது. ஏற்கெனவே 40,000 டன் அரிசி மற்றும் பெட்ரோல், டீசலை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடிக்கு அரிசி, மருந்துகள், பால்பவுடர் அனுப்ப தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்க தேவையான அனுமதிகளை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசின் தீர்மானம் ஒருமனதாக ஏப்.29ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.