புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட சில காரணங்களால் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே, உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் போதுமான அளவுக்கு சமையல் எண்ணெய் கையிருப்பில் உள்ளது என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இப்போது இந்தியாவிடம் 21 லட்சம் டன் சமையல் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் வெளிநாடுகளிலிருந்து 12 லட்சம் டன் எண்ணெய் விரைவில் வந்து சேரும் என்றும் நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சமையல் எண்ணெய் விலை நிலவரத்தை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அத்துடன் சமையல் எண்ணெய் விலையைக் குறைப் பது தொடர்பாக உற்பத்தியாளர் சங்கங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் கூறியுள்ளது.