சம்ஸ்கிருத சர்ச்சை: காத்திருப்போர் பட்டியலில் டீன் – சரியான நடவடிக்கையா, அவசர முடிவா?

சர்ச்சை:

கடந்த சனிக்கிழமை மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவமனை டீன் ரத்தனவேல், மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். புதிதாகச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் `ஹிப்போகிரடிக்’ உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம்.

புதிய மாணவர்களுக்கு சீருடை வழங்குதல்

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் `ஹிப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக, `மகரிஷி சரக் சபத்’ என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை உறுதிமொழியாக எடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதே சமயத்தில், ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது என்பது தொடர்பாக மருத்துவக் கல்லூரியில் விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “இது திட்டமிட்டோ வேண்டுமென்றோ நடத்த ஒரு செயல் கிடையாது. மத்திய அரசின் இணையதளத்திலிருந்த `மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழியை மாணவர்கள் சரி என்று நினைத்து வாசித்து விட்டார்கள். இதுகுறித்த தகவல் கல்லூரி முதல்வருக்குத் தெரியப்படுத்தவில்லை என்பது தான் உண்மை. மாணவர்களுக்கும் தெரியாது எங்களுக்கும் தெரியாது நடந்த ஒரு தவறு” என்று பேசினார்கள்.

அறிக்கை

இந்த விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள ஒரு உயர்மட்ட அதிகாரியிடம் பேசினோம். “தற்போது விசாரணை நடைபெறும் காரணமாகத் தான் கல்லூரி முதல்வர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றார். விசாரணை முடிந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம் எந்த உள்நோக்கம் இல்லாது நடைபெற்றது போல் தான் தெரிகின்றது. இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் என்ன வாசிக்கப் போகிறார்கள் என்பதை உறுதிசெய்திருக்க வேண்டியது முதல்வரின் கடமை தான்” என்று கூறினார்.

இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர் பேரவை தலைவர், “சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை; இதில் எவ்வித அரசியலும் இல்லை” என கூறியிருக்கிறார்.

மருத்துவர் சங்கப் பொதுச்செயலாளர் மருத்துவர். ரவீந்திரநாதிடம் பேசினோம், “தனிப்பட்ட முறையில் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கொரோனா சமயத்தில் அவர் செய்த பணிகள் எல்லாம் போற்றுதலுக்குரியது. இருந்தபோதிலும், தற்போது நடந்தது தவறு தான். அதேபோல, அரசு செய்துள்ள நடவடிக்கையும் சரி தான். என்ன உறுதிமொழி வாசிக்கப் போகிறார்கள் என்பதை அவர்தான் சரி பார்த்திருக்க வேண்டும். அங்கு என்ன நடந்தாலும் அதற்குக் கல்லூரி முதல்வர் தான் பொறுப்பு” என்று கூறினார்.

டாக்டர் ரவீந்திரநாத்

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலுக்கு ஆதரவாக ஒரு தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது.

மருத்துவக் கல்லூரி டீன் அவர்களுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்று பதிவுசெய்துள்ளார்.

இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.