சென்னை:
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா இரண்டு அணிகளை களமிறக்குகிறது.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பிரவின் திப்சே அணியை வழிநடத்துவார்.
ஓபன் பிரிவு முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத், இரண்டாவது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் பயிற்சியாளராக இருப்பார்கள். பெண்கள் முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டேவும், இரண்டாவது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்வப்னில் தோபடேவும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2014ம் ஆண்டு நார்வேயில் நடந்த ட்ரோம்சோ செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. அதன்பின்னர் 2020-ல் இணையம் வழியாக நடந்த ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் ரஷியாவும் இணைந்து தங்கம் வென்றன. 2021-ல் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.
இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து, ரஷியாவில் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிகள் விவரம்:
ஓபன் பிரிவு அணி-1: விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், கே.சசிகிரண்.
ஓபன் பிரிவு அணி-2: நிஹால் சரின், டி குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி.
பெண்கள் அணி-1: கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.
பெண்கள் அணி-2: வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ராத், திவ்யா தேஷ்முக்.