திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதி மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25-ம் தேதி ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பாப்பாக்குடியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து மாணவரின் தாயார் அளித்த புகாரின்பேரில் மோதலில் ஈடுபட்ட 3 மாணவர்கள் மீது பாப்பாக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 3 பேரும் திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபா பாக்கியமேரி, தமிழ்ச்செல்வன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.