சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 25, பெண்கள் 15 பேர் என மொத்தம் 40 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 24 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,019 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,489 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 49 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 505 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 47 ஆகவும், சென்னையில் 25 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, எந்தவொரு தனிநபரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 3,157 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 19,500 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,723 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.