சென்னை: தமிழக பாஜகவுக்கு புதிய மாவட்டத்தலைவர்களை நியமனம் செய்துமாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, பணியாற்றாத நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்தார். இதற்காக, நிர்வாகிகளின் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வந்தார்.
இந்த சூழலில், சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பல இடங்களில் அதிக வாக்குகள் பெற்றது. இருப்பினும், ஒருசில மாவட்டங்களில் எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியவில்லை. எனவே, ஏற்கெனவே சிறப்பாக பணியாற்றி வருபவர்களை உள்ளடக்கி தமிழகம் முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்தார்.
இந்நிலையில், 59 மாவட்ட தலைவர்கள், 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய 79 நிர்வாகிகளை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென் சென்னை மாவட்டம் காளிதாஸ், சென்னை கிழக்கு மாவட்டம் சாய் சத்தியன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் விஜய் ஆனந்த், மத்திய சென்னை மேற்கு மாவட்டம் தனசேகர், வட சென்னை கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகுமார், வட சென்னை மேற்கு மாவட்டம் கபிலன்,திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சரவணன், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அஷ்வின்குமார், காஞ்சிபுரம் மாவட்டம் பாபு, செங்கல்பட்டு மாவட்டம் வேதா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர். பால்ராஜ், ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 20 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.