சென்னை: தமிழ்நாட்டையே விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றி விடுவார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இசிஆர் சாலையை, கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் மாற்றி உள்ளது. இது திமுக ஆதரவாளர்களிடையே வரவேற்பும், எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் சூட்டுவதை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றவர், காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் பிரசித்திபெற்ற இசிஆர் சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்களை விரும்ப மாட்டார்கள். இப்படியே போனால், விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசியவர், அதிமுகவில் கட்சிக் கொடி கட்டுபவன் கூட முதல்வராக முடியும். ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா ? திமுகவில் அது போன்ற நிலைமை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியவர், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர், திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலின் முன் நிறுத்தப்படுகிறாரே, அவர் அமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில், முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் நிழல் உலக முதல்வராக செயல்பட்டு வருகிறார்கள், மகுடத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு சூட்ட வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். திமுகவில் பாட்டன், அப்பா, மகன் என வாரிசு அரசியல் மட்டுமே நடப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக கவுன்சிலர்களின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், திமுக அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மரியாதை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஜமீன்தார்களாக இருக்கிறார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் , திமுக ஆட்சிக் காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதியதை யாராலும் மறக்க முடியாது. அதே போன்று அப்போது, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதனால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் அதிமுக பிரபலத்துக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு, இந்த விஷயத்தில் அதிமுக எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்பு இருப்பதாக பொய் செய்தி பரப்பி வருகின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை; அதனால் பயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.