திருப்பதி:
திருப்பதி அடுத்த தாமனேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா. திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நெற்றியில் நாமம் இட்டு பக்தர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று வந்தார்.
இவரது மகன் கோவர்தன் (வயது 5). நேற்று காலை வெங்கட்ரமணா கோவில் அருகே பக்தர்களுக்கு நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டு இருந்தார். கோவர்தன் மாட வீதியில் விளையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென மாட வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த வெங்கட்ரமணா கோவர்தனனை பல்வேறு இடங்களில் தேடினார் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருமலை 2வது நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாடவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் சுமார் 30 வயதுடைய மொட்டையடித்த இளம்பெண் ஒருவர் சிறுவனின் கையை பிடித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மாலை 6 மணிக்கு திருமலையில் உள்ள பாலாஜி பஸ் நிலையத்திலிருந்து சிறுவனை பஸ்சில் அழைத்து செல்லும் காட்சிகளும், 7 மணி அளவில் திருப்பதி பஸ் நிலையத்தில் பஸ்ஸில் இருந்து இறங்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கோவர்தனனை அந்த பெண் எங்கு கடத்திச் சென்றார் என தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.