மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 154 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியதன் மூலம் தொடர்ந்து 9-வது முறையாக “போட்டியின் வேகமான பந்தை” வீசி ஐதராபாத் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் விருதை தட்டி சென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி இதற்கு முன் நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி வீரரான பெர்குசன் 153.9 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய சாதனையை உம்ரான் மாலிக் தற்போது முறியடித்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு எதிராக உம்ரான் இரண்டு முறை 154 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். ஆட்டத்தின் 10வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முதலில் இந்த வேகத்தில் வீசினார்.
அதை தொடர்ந்து 19-வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக் 154 கிலோ மீட்டர் வேகத்தில் தோனிக்கு யார்க்கர் வீசினார். இந்த பந்தை லாவகமாக எதிர்கொண்ட தோனி ஒரு ரன் மட்டும் எடுத்தார்.
24 வயதான காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை கிரிக்கெட் ஜாம்பவான்கள் உட்பட பல தரப்பினரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.