நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் – பரபரப்பு சம்பவம்

மும்பையில் இருந்து மேற்கு வங்கத்துக்கு வந்துக் கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு நேற்று இரவு ‘ஸ்பைஸ் ஜெட் போயிங் 737’ விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. துர்காபூர் அருகே வந்ததும் விமானம் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது.
image
இதனை ‘ஏர் – டர்பியுலன்ஸ்’ என்பார்கள். விமானம் குலுங்கியதால் பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். பலர் விமானம் குலுங்கியதில் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் பல பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சிறிது நேரத்திலேயே விமானம் துர்காபூரில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து, காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.
‘டர்பியுலன்ஸ்’ (Turbulence) என்றால் என்ன?
பொதுவாகவே, காற்றில் ஒரு இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த இயக்கம்தான் விமானம் வானில் பறப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விமானம் சரியாக இயங்குவதற்கு அதன் இறக்கைகளுக்கு கீழ் பகுதியில் இந்தக் காற்றின் இயக்கம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே இந்த இயக்கமானது சீராக இருக்கும். மிக அரிதாகவே காற்றின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும். இவ்வாறு மாறுபாடு ஏற்படும் சமயத்தில், அந்தப் பகுதியில் பறக்கும் விமானத்தில் சமநிலை பாதிக்கப்படும். இதன் காரணமாகவே, விமானம் குலுங்குகிறது. இதுதான் ‘டர்பியுலன்ஸ்’ என அழைக்கப்படுகிறது.
image
இது ஒரு அரிதான சம்பவம் என்றபோதிலும், அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர்கள் இந்த டர்பியுலன்ஸை நிச்சயம் ஒரு முறையாவது எதிர்கொண்டிருப்பார்கள். பொதுவாக டர்பியுலன்ஸ் எந்த ஆபத்தையும் விளைவிக்காது. எந்தவிதமான டர்பியுலன்ஸையும் சமாளிக்கும் வகையில்தான் விமானங்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என விமானிகளுக்கும் நன்றாக பயிற்சி வழங்கப்பட்டிருக்கும். டர்பியுலன்ஸ் ஏற்பட்டால் விமானம் கடுமையாக குலுங்கும். இதில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும். சரியாக சீட் பெல்ட் அணிந்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. சீட் பெல்ட் அணியாதவர்களே இருக்கையில் இருந்து கீழே விழ நேரிடும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.