மும்பையிலிருந்து நேற்று மேற்குவங்க மாநிலம் துர்காபூர் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் 14 பயணிகள், 3 விமான சிப்பந்திகள் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். விமானம் தரையிறங்கும் வேளையில் மோசமான வானிலையால் இந்த விபத்து நடந்திருந்தாலும் கூட விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது (டிஜிசிஏ) விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
நடந்தது என்ன?
நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்கு பயணிகளுடன் புறப்பட்டது ஸ்பைஸ் ஜெட் விமானம். அப்போது திடீரென நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கிக் குலுங்கியது. இதில் பயணிகளின் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்தன. இதில் சில பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தலைக்காயத்துக்காக சிலருக்கு தையல் போடப்பட்டது. ஒரு பயணி தனக்கு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பயணிகளில் மொத்தம் 14 பேருக்கும், விமான சிப்பந்திகளில் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளார். பயணிகளின் மருத்துவ அறிக்கையையும் பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சம்பவத்திற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மே 1ஆம் தேதி, ஸ்பைஸ் ஜெட் போயிங் B737 ரக விமானம் ( விமான எண்: SG-945 ) மும்பையில் இருந்து துர்காபூருக்கு சென்றது. எதிர்பாராவத விதமாக விமானம் ஜெட் டர்பியூலன்ஸில் சிக்கியது. இதில் சில பயணிகள் காயமடைந்தனர். இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் துர்காபூர் வந்தவுடன் காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) விமான நிறுவனம் இந்தியாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு (லோ பட்ஜெட்) குறைந்த செலவு விமான சேவை நிறுவனம். இது 34 இந்திய நகரங்கள் மற்றும் 7 வெளிநாட்டு நகரங்களுக்குத் தினமும் 273-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.