கள்ளக்குறிச்சி : ‘நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது’ என, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.கள்ளக்குறிச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;மக்களை ஏமாற்றி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். ஊடகமும், பத்திரிக்கையும் இல்லையென்றால் தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்காது.
தற்போது கடுமையான மின் வெட்டால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மின்வெட்டே இல்லை என்று கூறுகின்றனர். எப்போது எல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது எல்லாம் மின்வெட்டு பிரச்னை ஏற்படுகிறது. பத்து மாத ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாட்டிற்கு சென்றதாக மக்கள் கூறுகின்றனர். நானும் வெளிநாட்டிற்கு சென்றேன். அதன் பயனாக கள்ளக்குறிச்சி – சேலம் இரு மாவட்ட எல்லையில், 1,023 ஏக்கர் பரப்பளவில் 1,000 கோடி மதிப்பில் ஆசியாவிலயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கொண்டு வந்தேன். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவக்கி மருத்துவ கல்லுாரி போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லுாரி அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.ஆனால், நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று தி.மு.க.,வினர் அப்பட்டமாக ‘பொய்’ சொல்கின்றனர். நீட் தேர்வு கொண்டு வந்தது அ.தி.மு.க., என அமைச்சர் பொன்முடியும் ‘பொய்’ பேசுகிறார். காங்., – தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வுக்கு அடிதளமிடப்பட்டது.அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக 7.5 சதவீதம் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வாங்கி கொடுத்தேன். இதனால், அரசு பள்ளி மாணவர்கள் 540 பேர் மருத்துவம் படிக்கின்றனர். கட்டுமான பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க., ஆட்சி உள்ளது. நிர்வாக திறமை இல்லாத ஆட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில், தமிழகத்தில் குறைக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் காவல் துறை செயலிழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னையால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.வரும் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனைவரும் அ.தி.மு.க., வெற்றி பெற பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கள்ளக்குறிச்சிக்கு வந்த சட்டசபை எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, 80 கிலோ எடையும், பன்னிரெண்டரை அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான ரோஜா பூ மாலை கிரேன் மூலம் போடப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement