நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் மட்டக் குழுவுடன், இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தால், பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் மின்சாரத்தின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, ஏசி, ஃபேன் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்து உள்ளதால், மின்நுகர்வும் உயர்ந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் தொடர்
மின்வெட்டு
நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக ஒருசில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இருப்பதாக, ஆளும் ஆம் ஆத்மி அரசு வெளிப்படையாக புகார் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, டெல்லியில் போதுமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், டெல்லி மக்களை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில் இன்று, நாட்டில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் மட்டக் குழுவினருடன், அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், நிலக்கரி கையிருப்பு, மாநிலங்களில் நிலவும் மின்வெட்டு, நிலக்கரி வினியோகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய தேவையான முன்னேற்பாடுகளை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.