பாலியல் புகாரை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் நடிகர் விஜய் பாபு.
பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் நேரலையில் உரையாடிய விஜய் பாபு, பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.
இதனையடுத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதனிடையே இன்னொரு பெண்ணும் நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பேரில் எர்ணாகுளம் போலீசாரும் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) செயற்குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தான் செயற்குழு உறுப்பினராக உள்ள அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், தான் நிரபராதி என்று தெரியவரும் வரை, செயற்குழுவில் இருந்து விலகி இருப்பேன் என்றும் விஜய் பாபு குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதம் அம்மா அமைப்பில் விவாதிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எடவேல பாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஃபேஸ்புக் பதிவில் நடிகர் விஜய் பாபு தனது மீதான பாலியல் புகார்களை மறுத்துள்ளார். ”நான் எந்த தவறும் செய்யாததால் பயப்படவில்லை. நான் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மைக்கை வீசிய பார்த்திபன்; அதிர்ச்சியான ஏ.ஆர்.ஆர்… `இரவின் நிழல்’ விழாவில் என்ன நடந்தது?