பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதார ஆய்வாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதன் பின்னர் அவர் தாயகம் திரும்பினார். பின்னர் பாஜகவில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், போன்ற கட்சிகளை வெற்றி பெற வைத்தது வரை பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உண்டு. இதனிடையே சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சிக்காக வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிகே பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வந்தன. அதை வலுப்படுத்தும் வகையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சிலமுறை சந்தித்தார். எனினும் தான் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக வந்த தகவல்களை பிரசாந்த் கிஷோர் மறுத்தார். தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே இன்று பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில்; மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என சூசகமாக தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.