பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் கருவூலத்துக்குச் சேர வேண்டிய வெளிநாட்டுத் தலைவர்களின் பரிசுகளைத் தானே வைத்துக்கொண்டார் என அந்த நாத்தின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ஷெபாஷ் ஷெரீப்புக்கு எதிராகக் கோஷமிட்டதாக இம்ரான் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மதீனாவுக்குச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் அவரின் குழுவினருக்கு எதிராக யாத்ரீகர்கள் எனப்படும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு எதிராக கோஷமிட்டதாக 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இம்ரான் கான் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராக பைசலாபாத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கான் அரசின் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரின் தலைமை அதிகாரி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கைது செய்யப்படப்போவதாக, பாகிஸ்தான் அமைச்சர் ராணா சனாவுல்லா கூறியிருப்பதாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.