மக்களுக்காக உருப்படியான திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை:
அ.தி.மு.க. சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது:
அ.தி.மு.க.வின் 50 ஆண்டு காலத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியை ஏற்படுத்தி தந்த பெருமை எம்.ஜி.ஆரை சேரும். உழைப்பவரே உயர்ந்தவர் என்பது எம்.ஜி.ஆரின். தாரக மந்திரம். அ.தி.மு.க. சார்பில் இன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
இதற்கு காரணம் 505 தேர்தல் வாக்குறுதிகளை பொய் பொய்யாக சொல்லிச் சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு காலம் ஆகியும் எந்த உருப்படியான திட்டம் எதையும் மக்களுக்கு கொண்டு வரவில்லை.
ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்குதங்கம் திட்டத்தை பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதாக கூறி ரத்து செய்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட ஸ்கூட்டி திட்டத்தை ரத்து செய்துள்ளனர்,
இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
நாம் கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கிய திட்டங்கள் தற்போது முடிந்த நிலையில், அவற்றை திறக்கும் பணியில்தான் முதல்அமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நல திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.
இந்த பொதுக்கூட்டம் ஏராளமான மக்கள் கூட்டத்தால் மாநாடு போல் காட்சியளிக்கிறது.
மக்கள் ஏமாற்றப்பட்டதால், பெண்கள் உட்பட பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தின் காரணமாக இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் நிலை உருவாகி உள்ளது. எனவே அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று இந்த மே தின கூட்டத்தில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.
உழைப்பு உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்லும். அதற்கு எடுத்துக்காட்டு நம் இரு தலைவர்கள் (எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா) தான். அவர்களின் இந்த உழைப்பிற்கு, அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் மரியாதை நிச்சயம் உண்டு. உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உன்னதமான இடத்தை பெற்றிருக்கிறார்கள். அதேபோல் தொழிலாளர்களாகிய நீங்களும் கடுமையாக உழைத்து உயர் பதவிகளுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, ஆதி ராஜாராம், ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, அசோக், தி.நகர் சத்யா, தொழிற்சங்க செயலாளர்கள் புண்ணிய கோட்டி, சதீஷ்பாபு, சோமசங்கரன், அர்ஜுணன், வெங்கடேசன், எல்.ஐ.சி. ஜெயசங்கரன் உள்பட மாவட்ட, வட்ட, பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.