மதுரை: “உள்நோக்கத்துடன் யாரும் செயல்படவில்லை என்பதால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மாற்றத்தை மறுபரிசீலனை செய்து, முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் பரிசீலனை செய்து ரத்தினவேலுவை மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தி உத்தரவிட வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் வெளியிட்ட அறிக்கை: ”மதுரை மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய மகரிஷி சரகர் என்னும் உறுதிமொழியை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கியமைக்காக கல்லூரி முதல்வர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. மகரிஷி சரகர் என்னும் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்த உடனேயே எதிர்த்தது. நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் சேர்க்கை குறித்த ஆன்லைன் கூட்டத்தில் அதனுடைய தலைவர் அருணா வணிகர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும், முதலாம் ஆண்டு மணவர்கள் ‘ஒயிட் கோட் செரிமனி’ முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதுபோன்ற விழாக்கள் தமிழக அரசு கல்லூரிகளில் இதுவரை நடந்தது இல்லை. மேலும், மகரிஷி சரகர் உறுதிமொழியை அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த அறிவுரைகளை சுற்றறிக்கையாக 31.2.2022 அன்று தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்கியது.
கல்லூரி முதல்வர்களுக்கும், சங்கத்திற்கும் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றிக்கை குறித்து மாறுபட்ட கருத்து இருந்தாலும் இதுகுறித்து வேறு சுற்றறிக்கையோ அறிவுறுத்தல்களோ தமிழக அரசிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தும் வராத நிலையில் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் ஒயிட் கோட் செரிமனி மற்றும் மகரிஷி சரகர் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர்.
இதுபோலவே 30.4.2022 அன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் ஒயிட் கோட் செரிமணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய இருந்த மகரிஷி சரகர் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் சமஸ்கிருதம் மற்றும பிற மொழிகள் பயன்படுத்தி எந்த வித உறுதிமொழியை அல்லது பேச்சுகளோ நடைபெறவில்லை என்பதனை முதல்வருக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
ஒயிட் கோட் செரிமனி மற்றும் மகரிஷி சரகர் ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது. ஆனால், தவறுதலாக தகவல் பரவி சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததார்கள் என்று செய்திகள் பரவியது. இது முற்றிலும் பொய். அதனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மகரிஷி சரகர் உறுதிமொழி என்பது உள்நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கிறோம். அதனால், முதல்வர் கனிவுடன் பரிசீலனை செய்து முதல்வர் ரத்தினவேலுவை மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தி உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் யதார்த்தமாக தேசிய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்த உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் படித்தோம். இந்த உறுமொழியைப் படிக்க வேண்டும் என்பதை மாணவர் பேரவையே முடிவு செய்தது. இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இந்த உறுதிமொழியைப் படிப்பதால் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தே அவர்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்லவில்லை” என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், பொதுச் செயலாளர் வேணுகோபால் துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.