மருந்துகள் , மருத்துவப் பொருட்கள் கையளிப்பு

2022 ஏப்ரல் 29ஆம் திகதி, உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது.

இந்திய மக்களின் அன்பளிப்பான இம்மருந்துப் பொருட்கள் துரிதமாக அனுப்பப்படுவதனை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2.   பேராதனை போதனா வைத்தியசாலையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இம்மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 2022 மார்ச் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தபோது இப்போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

3.   அதுமட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் மருத்துவ சேவைகளை வழங்கிவரும் பல்வேறு மருத்துவ நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் பல மருந்துப்பொருட் தொகுதிகளை இந்தியாவிலிருந்து அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  அத்துடன், உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களுக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டத்தின்கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4.   அண்மைய காலங்களில் இலங்கைக்கான தமது ஆதரவினை இந்தியா துரிதமாக விஸ்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி, பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டம், நாணய பரிமாற்று நடவடிக்கைக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு மற்றும் ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்திற்கான கொடுப்பனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஒட்டுமொத்த பொருளாதார உதவியானது 2022ஆம் ஆண்டில் மாத்திரம் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. இந்நிலையில், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுடன் ஏனைய பொருட்களுக்கு புறம்பாக 16000 மெட்ரிக் தொன் அரிசி இக்கடன் உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

29 ஏப்ரல் 2022  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.