சிவகார்த்திகேயனின் `அயலான்’ படத்தை இயக்கி வரும் ஆர். ரவிக்குமார், அடுத்து சூர்யாவுடன் கைகோக்கிறார் என்று சொல்லியிருந்தோம். இதனையடுத்து இயக்குநர்கள் வெற்றிமாறன், த.செ.ஞானவேல் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.
சூர்யா இப்போது பாலாவின் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடந்து வருகிறது. பாலாவின் படத்திற்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனை முடித்துவிட்டு ‘அயலான்’ படத்திற்கு வருகிறார் சூர்யா. இது சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்கிறார்கள். விக்ரம் குமாரின் ’24’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் இது. அதைப் போல ரவிக்குமாரும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களை அடுத்து இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் இது.
இன்னொரு பக்கம் சுதா கொங்கராவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிப்பில் தயாரித்து வருகிறார் சூர்யா. அதில் கெஸ்ட் ரோலிலும் நடிக்கிறார். அதுபோக, அதே சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு தமிழ்ப் படமும் சூர்யாவுக்கு உறுதியாகியுள்ளது.
ரவிக்குமாரின் படத்தை முடித்துவிட்டு சூர்யா வருவதற்குள் வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தை முடித்திருப்பார். சூர்யாவும் ‘வாடி வாசல்’ படத்திற்குச் சென்று விடுவார். ஒருவேளை சூரியின் ‘விடுதலை’ (இப்போது இது விஜய் சேதுபதியின் படமாக வளர்ந்து வருகிறதாம்) படத்தின் வேலைகள் நீண்டால், உடனடியாக ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேலின் படத்திற்கு சூர்யா செல்ல உள்ளார் என்ற பேச்சு உள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தில் முதலில் சூர்யா கெஸ்ட்ரோலில் நடிப்பதாகத்தான் இருந்தது. அதன் பின் கதையின் ஆழத்தை பார்த்து, முழுக்கதையிலும் சூர்யா வந்து போனார். படமும் தனிப்பட்ட முறையில் சூர்யாவின் இமேஜை உயர்த்தியதால் த.செ.ஞானவேலின் படத்தில் அவர் இணைவதும் உறுதி என்கிறார்கள். இதனை முடித்த பின்னரே சுதா கொங்கராவின் படத்திற்கு சூர்யா வருகிறார். அதற்குள் சுதாவும் அக்ஷய் குமாரின் படத்தை முடித்திருப்பார் என்கிறார்கள்.