கொல்கத்தா: மும்பையில் இருந்து துர்க்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், புழுதி புயலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த 40 பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்கு இயக்கப்படும் ‘ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737’ என்ற விமானம், நேற்று மும்பையிலிருந்து துர்காபூருக்கு சென்ற போது, நஸ்ருல் இஸ்லாம் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட புழுதி புயலால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இருந்தும் பைலட்டின் சாமர்த்தியம் காரணமாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டாலும், சுமார் 40 பயணிகள் காயமடைந்தனர்; இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், புழுதி புயலில் சிக்கியதால் நடுவானில் நின்றது. அதனால் கேபினின் லக்கேஜ்கள் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தன.இதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாகவும், 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள ராணிகஞ்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்பைஸ்ஜெட் எக்ஸ்பிரஸ் நிறுவனம், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
