ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை மருத்துவக்கல்லூரியில் சனிக்கிழமையன்று முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை ஏற்ற விவகாரம் தொடர்பாக டீன் ரத்தினவேலு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் குமாரவேல் உள்ளிட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து ஆட்சியர் அனீஷ்சேகர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்ததுடன் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்க விரும்பினால் விளக்கம் அளிக்கலாம் என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லி புதிய தலைமுறைக்கு விளக்கமளித்துள்ளார். ’’கடந்த மார்ச் 11ஆம் தேதி வைட் கோட் செர்மனி நடத்தப்பட்டது. முதலாமாண்டு மாணவர்கள் சேர்ந்திருப்பதால், ஹிபோக்ரட்டிக்(Hippocratic), சரக் சபத் மற்றும் உடற்கூறிவியல் உறுதிமொழி ஆகிய மூன்று உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. அதற்குமுன்பு மாணவர்களுக்கு வகுப்பு எப்போது தொடங்கவேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்களே தேசிய மருத்துவ ஆணையரகம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழங்கியது. நேற்றையதினம்தான் ஹிபோக்ரட்டிக் (Hippocratic) உறுதிமொழி மட்டுமே எடுக்கவேண்டும் என தமிழக மருத்துவ இயக்குநரகம் நேற்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைப்படியே ‘வைட் கோட் செர்மனி’, சரக் சபத் உறுதிமொழி எடுக்கப்பட்டதாகவும், தேசிய மருத்துவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சரக் சபத் போன்றவை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது எனவும், மதுரையில் நடந்த நிகழ்வில் சரக் சபத் உறூதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM