சென்னை:
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் மே தின பொதுகூட்டம் எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகில் நடந்தது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தை அகில இந்திய தலைவர் டாக்டர் விருகை வி.என்.கண்ணன் சங்க கொடியை ஏற்றி வைத்து துவக்க உரை ஆற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
நிலத்தரகர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மே தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்.
சங்கத்தின் தலைவரான வி.என். கண்ணனின் அயராத உழைப்பு சங்கத்தை நல்ல தொரு வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று வருகிறது.
சங்கத்தின் நல்ல கோரிக்கையான, ஜனநாயக கோரிக்கையான ரியல் எஸ்டேட் தொழிலாளர்களை அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என சமீபத்தில் நடந்த பொன்குமார் திருமண விழாவில் முதல்அமைச்சரிடம் கோரிக்கை வைத்து பேசினேன். இந்த கோரிக்கையை முதல் அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி பெற்றத்தர முயற்சி எடுப்பேன். முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.அது நடைபெறவேண்டும்.
தொழிலாளர்களுக்காக அவர்களது பெயரில் சுதந்திர தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தவர் டாக்டர் அம்பேத்கர். தொழிலாளர்களுக்காக குரல் எழுப்பிய அவரது வழியில் உண்மையாக உழைப்போம் உயர்வோம். அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு செல்போன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, அசன் மவுலானா, கவுன்சிலர் கண்ணன், சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கே.வி.எஸ். சரவணன், அன்னை சரவணன், சேலவாயல் சரவணன், யுவராஜ், ஜி.வி.என்.குமார், பந்தல் செல்வம், ராஜன், நிர்மலா, தனசேகரன், ஜெகன்நாதன், பாலசுப்பிரமணி, மகேந்திரன், நாகராஜ், விடுதலை சிறுத்தை தென் சென்னை(மே) மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன், வளசை பிரபு, குறிஞ்சி பாலாஜி, சீனிவாசன், ராஜகுமரன், ரஜினிராஜ், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.