லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3000-ஐ தாண்டியது

02.05.2022
22:00: உக்ரைனின் கிழக்கில் ரஷியாவின் தாக்குதல் மற்றும் கடுமையான சண்டை தொடர்ந்ததால், மரியுபோலில் இருந்து மேலும் பல பொதுமக்களை வெளியேற்ற முடியும் என உக்ரைன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.  மக்களை வெளியேற்றுவதற்காக, யுனிசெஃப் மற்றும் பிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள், உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஜியாவில் தயார் நிலையில் உள்ளன.
20:00: உக்ரைன் போரில் எந்த நாட்டிற்கும் வெற்றி கிடைக்காது என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
19:00: உக்ரைன் மீது பிப்ரவரி 24 அன்று ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின்  எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து இன்று வரை 254 பேர் கொல்லப்பட்ட நிலையில், மொத்த உயிரிழப்பு 3153 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.30:  கிழக்கு பகுதியில் நடைபெறும் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, மரியுபோல் துறைமுகத்தில் இருந்து ரஷியா சில படைகளை  மீண்டும் நிலைநிறுத்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறுகிறது.
16:00: ரஷியாவின் சமீபத்திய குண்டுவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் 3  பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
15:00: பொருளாதாரத் தடை அல்லது ரஷியா எடுக்கும் முடிவு காரணமாக, ரஷிய எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டால் அதை சமாளிக்க தங்களால் முடியும் என்று ஜெர்மனி கூறுகிறது.
14:30: பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை குறைப்பதற்கு ரஷியா முடிவு செய்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி துறை அமைச்சர்கள் இன்று கூடுகின்றனர். மேலும் ரஷியா மீது புதிய தடைகள் விதிக்கலாமா? என்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.
14:00:நாசிசம் மற்றும் யூத எதிர்ப்பு பற்றி ரஷிய வெளியுறவு மந்திரி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அந்நாட்டின் தூதருக்கு இஸ்ரேல் சம்மன் அனுப்பி உள்ளது. 
13.30: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ரஷியா கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து நேற்று 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
07.40: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைனுக்குச் சென்றார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக நன்றி தெரிவிக்க வந்ததாகவும், போராட்டம் முடியும் வரை உக்ரைனுடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார். 
இருவரும் சந்தித்த விடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.
04.50:  டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷிய படையினர் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் டொனெட்ஸ்கில் உள்ள லைமன் நகரில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்தததாகவும், அந்த பிராந்திய ஆளுனர் பாவ்லோ கைரிலெங்கோ தெரிவித்துள்ளார். 
03.30:  உக்ரைன் நகரமான மரியுபோலில் உள்ள உருக்காலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உக்ரைன், ரஷிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அசோவ்ஸ்டல்  உருக்காலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐநா மனித உரிமை ஆணைய செய்தித் தொடர்பாளர் சவியானோ அப்ரூ தெரிவித்தார்.
02.10: அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 500 காயமடைந்த வீரர்கள் மற்றும் ஏராளமான இறந்த உடல்களுடன்  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பதாக  
உக்ரைன் தேசிய காவலர் படைப்பிரிவின் கமாண்டர் டெனிஸ் ஷ்லேகா தெரிவித்துள்ளார்.
01.40: ரஷிய படைகள் ஸ்லோபோடா, டொனெட்ஸ்க் மற்றும்  டாரைடு பகுதிகளில் முன்னேற முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்களை தடுக்கும் வகையில் அப்பகுதிகளில் உக்ரைன் ராணுவத்தினர்  தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷியப் படைகள் மருத்துவ உள்கட்டமைப்பை அழித்ததாகவும், உபகரணங்களை எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
01.05.2022
18:30: ஆயிரக்கணக்கான நேட்டோ வீரர்களை உள்ளடக்கிய ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளதாக போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இது, நேட்டோ கூட்டணியின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் வழக்கமான பயிற்சி ஆகும். ஆனால், இந்த ஆண்டு உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ளதால் இந்த பயிற்சி கவனம் பெற்றுள்ளது. 
18:00:  அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து இன்று ஐ.நா. சின்னங்களை தாங்கிய வாகனங்களில் 40 பொதுமக்கள் கொண்ட குழு வெளியேற்றப் பட்டுள்ளது.
14.30: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படைகள் தன் வசம் ஆக்கியது. இந்நிலையில், மரியுபோல் நகரில் தங்கள் உறவுகள் சிக்கித்தவித்து வருவதாகவும், அந்நகர மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற சர்வதேச தலைவர்கள் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலியுறுத்தி கீவ் மக்கள் வீதிகளில் நின்று போராட்டம் நடத்தினர்.
10.00:  கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக்க ரஷியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், திட்டமிட்டபடிதான் உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்கிறது என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். 
04.20:  உக்ரைனின் மரியுபோல் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற ஐ.நா.வின் முயற்சி குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இந்த  உரையாடலின் போது, ​​உக்ரைனுக்கு இங்கிலாந்து பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியை தொடர்ந்து வழங்கும் என்றும் ஜான்சன் உறுதியளித்தாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
02.40:  உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமும், முக்கிய துறைமுகமுமான ஒடேசாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையை ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒடேசா விமான ஓடு பாதையை உக்ரைன் விமானப்படை இனி பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களை அந்த இடத்தில் தங்கியிருக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.