சென்னை: காலிப் பணியிடங்கள் அதிகமாகி விட்டதைக் காரணம் காட்டி முழுமையாக முடிவடைந்த தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க விற்பனை பிரதிநிதிகளுக்கு 2020-ல் நடத்திய தேர்வு முடிவுகளை 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டுறவுத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க கடைகளில் 236 விற்பனை பிரதிநிதிகள் பணிக்கு மாவட்ட கூட்டுறவு சங்க தேர்வு குழு விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு நேர்முகத் தேர்வு நடத்திய நிலையில், அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து திவ்யா, தமிழ்மணி உள்ளிட்ட 8 பேர் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, தேர்வை ரத்து செய்துவிட்டதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 8 பேரும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் , தேர்வு நடைமுறைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வு நடைமுறைகள் முழுமையாக முடிந்த நிலையில், தேர்வில் பங்கேற்றவர்களை வெளியேற்றும் வகையில் தேர்வை ரத்து செய்தது தவறு. புதிய தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத வகையில் சிலர் வயது வரம்பை கடந்திருக்கலாம். காலியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவற்றுக்கு தனியாக தேர்வு அறிவிப்பு வெளியிட எந்த தடையும் இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், 2020-ம் ஆண்டு நடத்திய தேர்வின் முடிவுகளை 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.