ஆடுகளம், சுந்தர பாண்டியன், நண்பன், அசுரன் போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் `ஆடுகளம்’ நரேன். தனது இத்தனை ஆண்டு கால சினிமா பயணம் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
“எனது பள்ளிப் பருவத்திலேயே சினிமாதான் என் வாழ்க்கை என்று தீர்மானித்துவிட்டேன். அதற்கு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. கடைசியில் விட்டுவிட்டார்கள். ஆனால் சினிமாவிற்குள் முழுதாய் வருவதற்கு முன்பு சேல்ஸ் ரெப், பிசினஸ் என்று பல வேலைகள் செய்து கொண்டிருந்தேன். எதிலுமே எனக்கு முழு ஈடுபாடு இருந்ததில்லை. சினிமாவில் மட்டும்தான் முழு ஈடுபாடு இருக்கும். முதலில் ஆக்டிங் ஸ்கூலில் பயின்றேன். பின், அதிலேயே ஆசிரியரானேன். பின் சிறிது காலம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஆனால் சும்மா இருக்கவே மாட்டேன். எதையாவது செய்துகொண்டு தான் இருப்பேன். வாழ்க்கையே எதையாவது கற்றுக்கொள்ளத்தானே!.”
உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் யாரைக் கூறுவீர்கள்?
“நாசர் சார்தான். அவரைப்போல நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அவருடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். ஒரு நடிகர் என்றால் ஒரு அளவுகோல் இருக்கும். அது அவரிடம் இல்லாததுபோல தெரிந்தது. வில்லன் கதாப்பாத்திரத்திலும் சரி, காமெடியிலும் சரி, எது கொடுத்தாலும் சிறப்பாய் நடிப்பவர். அவரைப் போன்று நடிப்பதெல்லாம் ரொம்பக் கஷ்டம்.”
திரையில் ஒரு தந்தையாக உங்களை பல முறை பார்த்திருக்கிறோம். வீட்டில் ஒரு தந்தையாக நீங்கள் எப்படி?
“வீட்டைப் பொறுத்தவரை நான் எதையும் கண்டுகொள்ளமாட்டேன். எல்லாமே என் மனைவிதான். ஒரு அப்பாவாக நான் ஜாலியாகத்தான் இருப்பேன். படத்தில் அந்த கதாப்பாத்திரத்திற்கான தேவை இருப்பதால் கண்டிப்பான அப்பாவாக நடித்தேன். ஆனால் வீட்டில் நடிக்கத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை காருக்கு ட்யூ கட்ட வேண்டும். பெட்ரோல் போட வேண்டும் என்பது மட்டும் என் செலவு. மற்றபடி வீட்டை நிர்வகிப்பதெல்லாம் என் மனைவிதான்.”
இயக்குநர் மிஷ்கின் தனக்குப் பிடித்த நடிகரென உங்கள் பெயரையும் ஒருமுறை சொன்னார். அவர் படத்தில் நடித்த நடிக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?
“மிஷ்கின் ஒரு குழந்தை மாதிரி. நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது `அஞ்சாதே’ திரைப்படத்திற்காக என்னை அழைத்தார். ஒரு கதாபாத்திரம் பண்ண வேண்டும். ஒரு பெண்ணுடைய அப்பாவாக நீங்கள் என்ன செய்வீர்களோ, அதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். ஒரு காட்சி நடித்துக் காண்பித்தார். அப்போது நான், “இதேபோல பண்ணனுமா மிஷ்கின்” என்று கேட்டேன். அதற்கு அவர், “எனக்கு எப்படினு சொல்லத் தெரியல. ஆனா எனக்கு இதுமாதிரி வேணும்” என்று சொன்னார். உடனே நான் வேறு மாதிரி நடித்துக் காட்டினேன். அது அவருக்குப் பிடித்துவிட்டது. மிஷ்கின் எளிமையாகப் பழகக்கூடியவர். அவரிடம் எதுவாக இருந்தாலும் ரொம்ப ஓப்பனாக பேசலாம். உண்மையாக இருப்பார்.”
நீங்கள் இயக்குநர் வெற்றிமாறனின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அவரைப் பற்றி…
“வெற்றிமாறனும் நானும் ஒரே இடத்தில் படித்தவர்கள். நாங்கள் இருவருமே இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவர்கள். அதனால் எனக்கு பல வருடங்களாகவே வெற்றிமாறனைத் தெரியும். நான் வெற்றியை, `போடா’, `வாடா’ என்றுதான் கூப்பிடுவேன். வெற்றிமாறன் ரொம்ப ஜாலியாகக் கதை சொல்வார். என்னிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் `அசுரன்’ மாதிரி படங்கள்கூட எளிதாய் நடிக்க முடிந்தது. அதேபோல அவர் எல்லாவற்றையுமே மிக வேகமாகக் கற்றுக்கொள்வார். `ஆடுகளம்’ படத்தின்போது ஒட்டுமொத்த செட்டும் மதுரை ஸ்லாங்கில் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரும் மதுரை வழக்கில்தான் படம் முடியும்வரை பேசினார்.