லக்னோ: வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.3,000 கோடிக்கு மேல் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலரிடம் பிலிப் கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பதிவுக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை கட்டுமாறும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மன்ஸ்ருல் இஸ்லாம்என்பவர் ‘டால்பின் கன்சல்டன்ட் சர்வீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்தார்.
விளம்பரத்தைப் பார்த்து பணம் கொடுத்து வேலை கிடைக்காத பலர் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு மன்ஸ்ருல் இஸ்லாமை உத்தர பிரதேசத்தில் கைது செய்தனர்.
விளம்பரத்தைப் பார்த்து வேலை கிடைக்கும் என்ற ஆசையில் ஆன்லைனில் ஏராளமானோர் கட்டிய ரூ.3,000 கோடியை மன்ஸ்ருல் இஸ்லாம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரை நொய்டாவில் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் இப்படி மோசடி செய்த பணத்தை மன்ஸ்ருல் இஸ்லாமும் அவரது கூட்டாளிகளும் ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் டிஜிட்டல் கரன்சி வாயிலாக வெளிநாடுகளுக்கு அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் மன்சூர் இஸ்லாமின் வங்கிக் கணக்குகளை முடக்கி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரி வித்தனர். -பிடிஐ