நியூசிலாந்திற்கு வந்த 60 நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் உறவினர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்ததால், அவர்களை ஆனந்த கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா தொற்று காரணமாக நியூசிலாந்தில் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் வெளிநாட்டவர்கள் தங்கள் உறவுகளை சந்திக்க முடியாத சூழல் உருவானது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் எல்லைகள் திறக்கப்பட்டு நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவுஸ்திரேலியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விசா விலக்கு அளிக்கப்பட்டு பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான பயணிகள் நியூசிலாந்திற்கு வெகு நாட்களுக்கு பிறகு வந்தடைந்தனர். அவர்கள் தங்களது உறவுகளை பார்த்ததும் ஆனந்த கண்ணீரோடு கட்டியணைத்து கொண்டனர்.
குறித்த பயணிகளுக்கு COVID இல்லை என்று உறுதி செய்யப்பட்டதுடன், தடுப்பூசியும் போடப்பட்டு நியூசிலாந்தில் அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகளில் சிலர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தம் உறவுகளை சந்தித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் இருந்து வந்தவர்களுக்கு சாக்லேட்டுகள் வழங்கப்பட்டன.
கார்த் ஹாலிடே என்ற பெண்மணி தனது மகன், மருமகள் மற்றும் பேரன் லண்டனில் இருந்து தரையிறங்குவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்ததாகவும், பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதைப் பார்ப்பது தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.