”தயாரிப்பாளர் சங்கமும், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளையும், பொதுவிதிகளையும் சம்பள உயர்வையும் பேசி முடித்துக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டு அமைப்பிற்கும் செல்லும் என ‘ஃபெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருக்கிறார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் ”அஜித்தின் படங்களுடைய படப்பிடிப்புகள் தொடர்ந்து வெளி மாநிலங்களில் நடந்து வருவது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி பேசியதாவது,
”பத்திரிகையாளர்கள் இப்படி ஒரு குரல் எழுப்பியதற்கு வணக்கத்தை தெரிவிச்சுக்கறோம். ஏன்னா, இது எங்களுடைய குரல். எங்களுக்குக் கேட்கத் தெரியும். இல்லைனா சண்டைபோடத் தெரியும். இதுல சண்டை போடுற விஷயத்துக்கு நாங்க போக வேணாம்னு பாக்கறோம். அஞ்சாறு வருஷமா பேசிகிட்டு இருக்கோம். வேணும்னா ஷூட்டிங்கை நிறுத்தலாம். அப்படி நிறுத்தினா, கெட்டப்பெயர் வரும். எங்களுடைய பொறுமையைமீறி வேண்டுகோளா வச்சிட்டிருக்கோம். அரசிற்குகூட கோரிக்கை வைக்கப்போறோம். ஏன்னா, வருமானம் இங்கே. செலவு அங்கேயா?
சில நேரங்களில் இயக்குநரா வெளி மாநிலங்களில் போய் படப்பிடிப்பு நடத்துற சூழல் இருக்கும். கதை அந்த லொகேஷன் கேட்கும். கடற்கரையும் வேணும், மலையும் வேணும்னா வைசாக் போயிடுவோம். கோல்கொண்டா வேணும்னா ஐதராபாத் போயிடுவோம். பனிச்சாரல் வேணும்னா இமயமலை போயிடுவோம். லொகேஷன் தேவைப்படும்போது அங்கே போறதுல தப்பில்ல. ஏன்னா படம் நல்லா வரணும். ஆனா, நீங்க ஐதராபாத் போயிட்டு சென்னை மவுன்ட் ரோட்டை அங்கே போய் அரங்கம் அமைக்கறது. தேனியை அங்கே செட் போடுறது, இல்ல ஐகோர்ட்டை அங்கே போய் செட் போடுறது சரியானதா? இன்னிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கே ஒர்க் பண்றாங்க. உங்களை நேசிக்கின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றை காயப்போட்டுட்டு, நீங்க அங்கே போய் ஒர்க் பண்றதுல உங்களுக்கு எந்தவிதமான ஈகோ சேட்டிஸ்பைடு ஆகுது? அது தவறு. வேண்டுகோளாவே வைக்கிறோம்.
ஏன்னா, இதுபோல விஜய் சாருக்கும் வேண்டுகோள் வச்சோம். அவர் உடனடியாக கேட்டு, அவரது படப்பிடிப்பை இங்கே வச்சார். ரஜினி சாருக்கு சொன்னோம். அவரது பட செட்டை இங்கே வச்சாங்க. சில நேரங்கள்ல அவங்களுக்குத் தேவையான பிரமாண்டமான தளங்கள் இங்கே இல்லை. அப்படி போறது தப்பில்ல. ஆனா, தொடர்ச்சியா அங்கே போறது சரியில்ல. இப்ப அஜித் சாருக்கு நேரடியாகவே வேண்டுகோள் வைக்க விரும்புறோம். இதுவரைக்கும் அவரோட இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தான் வேண்டுகோள் வச்சிருந்தோம். ‘உங்களால.. உங்க படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கறதால தமிழ்த் திரைப்படத்துறையைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பும், நஷ்டமும் ஏற்படுது. இதனால உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படும். எனவே வருங்காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ இதைத் தவிர்க்கப் பாருங்கள் என்பதை நேரடி வேண்டுகோளாகவே வைக்கிறேன்.” என்று பேசியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி.