அடுத்தடுத்து 2 விசாரணைக் கைதிகள் மரணம்.. காவல்நிலையங்களுக்கு டிஜிபி விடுத்த அதிரடி உத்தரவு

விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டாம் எனவும், மாலை நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டுமெனவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது பார்க்கலாம்.
சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷிடம் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார். வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
image
அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி தங்கமணி என்பவரை போலீசார் கடந்த மாதம் 26 ஆம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தங்கமணி கடந்த 27 ஆம் தேதி வலிப்பு வந்ததால் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
image
ஆனால், போலீசாரின் கொடூர தாக்குதலே தங்கமணியின் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்விரு வழக்குகள் தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சமூம வலைதளங்களிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் லாக்-அப் மரணங்களுக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பி வருகிறது.
image
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், காவல்துறையினர் எக்காரணத்தைக் கொண்டும் விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்படும் விசாரணை கைதிகளிடம் காவல்துறையினர் மாலை நேரத்திற்குள் விசாரணையை முடித்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு வாய் மொழி உத்தரவிட்டுள்ளார். இரு விசாரணை கைதிகளின் அடுத்தடுத்த மரணத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.