அனுமன் மந்திரத்தால் சிறையில் தவிக்கும் கருணாஸ் பட நாயகி..! தரையில் உறங்கும் சோகம்..!

மகராஷ்டிரா முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு மக்களின் துன்பம் தீர அனுமன் மந்திரம் படிக்க முயன்ற  நடிகையும் எம்.பியுமான நவ்னீத் கவுர் ராணா மற்றும் எம்.எல்.ஏவான அவரது கணவர் ஆகியோர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 11 நாட்களான நிலையில், மும்பையில் உள்ள அவர்களது வீட்டை இடிப்பதற்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது

நடிகர் கருணாஸ் உடன் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நாயகியாக நடித்தவர் நவ்னீத் கவுர் ராணா. இவர் ரவி ராணாவை திருமணம் செய்த பின்னர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

நவ்நீத் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்ற நிலையில் அவரது கணவர் ரவி எம்.எல்.ஏ தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். எம்.பி. எம்.எல் ஏவாக உள்ள மனைவியும் கணவனும் மகாராஷ்டிரத்தில் ஆளும் கட்சியான சிவசேனாவுக்கு தொடர்ந்து தங்களது போராட்டங்கள் மூலம் குடைச்சல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23 ந்தேதி மராட்டிய முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு மக்களின் துன்பங்கள் நீங்க அனுமன் சலீசா எனப்படும் அனுமன் மந்திரம் பாடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்த மகாராஷ்டிரா போலீசார் அவர்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் கைதாகி 11 நாட்கள் கடந்தும் ஜாமீன் கிடைக்காத நிலையில் சிறையில் அவர்களுக்கு முதல் வகுப்பு வழங்காததால், எம்.பி நவ்னீத், எம்.எல்.ஏ ரவி ஆகியோர் தரையில் படுத்து உறங்குவதாகவும் நவ்னீத்துக்கு ஸ்போண்டி லோசிஸ் பாதிப்பு இருப்பதால் உடல்வலியால் அவதியுறுவதாக , ஜெயில் சூப்பிரண்டுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவரது வழக்கறிஞர் ரிஸ்வான் மெர்ச்சண்ட் தெரிவித்தார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள நவ்னீத் தம்பதியருக்கு சொந்தமான வீட்டின் கட்டுமானத்தில் விதிமீறல்கள் இருப்பதாக புகார் வந்துள்ளதால் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் 4ந்தேதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதி மீறல் இருந்தால் அகற்றப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு சொந்தக்காரர்கள் சிறையில் இருக்கும் நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்படுவதாக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.