“அன்று ரூ.1 டெல்லியில் இருந்து அனுப்பினால் மக்களிடம் வெறும் 15 பைசா தான் சென்று சேர்கிறது என்றொரு காங்கிரஸ் பிரதமர் பேசியிருந்தார். அவரைப் போல் நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்மிடம் தொழில்நுட்ப வசதி உள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நடப்பு 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் செல்கிறார். 3 நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் அவர் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “அன்று ரூ.1 டெல்லியில் இருந்து அனுப்பினால் மக்களிடம் வெறும் 15 பைசா தான் சென்று சேர்கிறது என்றொரு காங்கிரஸ் பிரதமர் பேசியிருந்தார். அவரைப் போல் நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்மிடம் தொழில்நுட்ப வசதி உள்ளது. அது புதிய இந்தியாவின் அரசியல் நேர்த்தி. இப்போது மக்கள் நலத் திட்ட நிதியுதவி எல்லாம் நேரடியாகவே பயனர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. 22 லட்சம் கோடி ரூபாயை இதுவரை நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளோம். இது ஜனநாயகத்தின் வெற்றியும் கூட. புதிய இந்தியாவுக்குப் பாதுகாப்பான எதிர்காலம் பற்றி கவலையில்லை. புதிய இந்தியா துணிந்து செயல்படுகிறது, புத்தாக்கத்தில் சாதிக்கிறது. 2014ல் வெறுm 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் இருந்தன. இன்று 68,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. ஏராளமான யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. முன்பு ஒரே தேசமாக இருந்தாலும் கூட ஒரே அரசியல் சாசனம் நடைமுறையில் இல்லை. அப்படியொன்றை உருவாக்க 70 ஆண்டுகளாகியும் அவர்களால் (காங்கிரஸால்) முடியவில்லை. ஆனால், பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டத்தை ரத்து செய்தது. இப்போது, காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்தைக் கொடுத்துள்ளது” என்றார்.