அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்- அன்புமணி அறிக்கை

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த தங்களின் எதிர்பார்ப்பு மருத்துவத்துறை மானியக் கோரிக்கையில் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் நம்பினர். அதற்கு காரணம்,
2019ம் ஆண்டு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்-அமைச்சருமான ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால், அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், கோரிக்கைகள் மட்டும் நிறைவேறவில்லை. மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்குக் காரணம் அரசு மருத்துவர்கள் தான்.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிக செலவும் ஆகாது. ஆண்டுக்கு ரூ.300 கோடி மட்டும் தான் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு எந்தத் தயக்கமும் இல்லாமல், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவத் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடத் தவறிய இது குறித்த அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே வெளியிடுவதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்… இந்தியாவில் தனித்துவிடப்படும் அரசியல் வரவேற்கத்தக்கது அல்ல- மம்தா பானர்ஜி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.