மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சிம்ரன் ஹெட்மயர் கடைசி நேரத்தில் 13 பந்துகளில் 27 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஹெட்மயர் இந்த போட்டியில் தாமதமாக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளரான சுனில் கவாஸ்கர் ராஜஸ்தான் அணி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஆட்டத்தை முடிக்கும் திறன்கொண்ட வீரர் என்றால் 14-வது ஓவர் அல்லது 15-வது ஓவரில் தான் களமிறங்க வேண்டும் என மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
ஒரு வீரரின் ஆட்ட திறனைப் பார்த்து அவரை சில ஓவர்களுக்கு முன்னாள் கூட களமிறங்க வைக்கலாம். ஒரு பினிஸ்சர் நல்ல ஃபார்மில் இருந்தால் 11வது ஓவரில் ஒரு விக்கெட் விழுந்தாலும் அவரை களமிறக்கலாம்.
ஹெட்மயரை தாமதமாக இறக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை ” என கவாஸ்கர் தெரிவித்தார்.