`ஆக்கிரமிப்பு பஞ்சாயத்து நிலங்களை காலி செய்யாவிட்டால் புல்டோசர் பாயும்’-பஞ்சாப் அமைச்சர்

பஞ்சாபில் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்போர் உடனடியாக காலி செய்யாவிட்டால், புல்டோசரை சந்திக்க தயாராக இருக்கவும் என அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் எச்சரித்துள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக அமைச்சராகியிருப்பவர் குல்தீப் சிங் தலிவால். இவர் தனது துறை வளர்ச்சி குறித்து பேசுகையில், `ஊராட்சிகளுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் உடனடியாக மீட்கப்படும்’ என்று கூறினார். அதன்படி தற்போது பேசுகையில், `ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்’ என்று தெரிவித்த குல்தீப் சிங், “சட்ட விரோதமாக வீடுகள், கட்டடங்கள் கட்டியிருப்போர் உடனடியாக காலி செய்ய வேண்டும். ஒருவேளை அப்படி காலி செய்யாவிட்டால், புல்டோசரை சந்திக்கத் தயாராக இருக்கவும்” என அதிரடியாக பேசியுள்ளார்.
image
முன்னதாக, பஞ்சாபின் 17வது முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான், ஊழல் தொடர்பான விஷயங்களைப் பொதுமக்கள் புகாரளிக்க ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பாக ட்வீட் செய்த பகவந்த் மான், “பகத் சிங்கின் தியாக தினத்தன்று, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்படும். இது எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அவர்களின் ஆடியோ/வீடியோ கிளிப்பை பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் ஊழலுக்கு இனி கால்கள் இருக்காது.
இதையும் படிங்க… தடைகளை தகர்த்தெறிந்து சாதனை – ஆம் ஆத்மி பஞ்சாபை வசப்படுத்திய கதை!
99 சதவீத மக்கள் நேர்மையானவர்கள், மீதமுள்ள 1 சதவீதத்தினரால் தான் இந்த அமைப்பு சீர்குலைந்துள்ளது. பஞ்சாபில் இனி யாரிடம் இருந்தும் பணம் பறிக்கப்படாது, எந்த அதிகாரியையும் அமைச்சர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இதனொரு அங்கமாகவே அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.