ஹெராட்: ஆப்கன் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
தாலிபான் பயங்கரவாத அமைப்பு தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது பிற்போக்குத்தனமான ஷரியா சட்டம் கொண்டு ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது, இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி மறுப்பது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தாலிபான் ஆட்சியில் அதிகரித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பல கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையிலும் தொடர்ந்து இதே நிலை நீடிக்கிறது.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களில் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் போதிலும் ஹேராட் நகரில் பெண்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. மேலும் இங்கு பெண்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நகரையும் விட்டுவைக்காமல் தாலிபான் ஓர் கட்டாய உத்தரவிட்டுள்ளது. இனி பெண்களுக்கு கார்கள் மற்றும் பைக் ஓட்ட டிரைவிங் பள்ளிகள் உரிமம் வழங்க கூடாது என்று நகரின் தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் கார்களில் பயணிக்கலாமே தவிர வாகனங்களை ஓட்டக்கூடாது என தாலிபான் அரசு கூறியுள்ளது.
இதனால் அங்கு பணிக்குச் செல்லும் பெண்கள் பலர் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தாலிபான்களின் இந்த பிற்போக்குத்தனமான சட்டத்துக்கு வழக்கம்போல சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Advertisement