“வெளிநாடுளை ஒப்பிடும்போது இந்தியப் பெண்கள் தங்கள் கணவர்மார்கள் மீது அதீத அன்பை (பொசசிவ்னஸ்) வைத்திருக்கிறார்கள்” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் சுஷில் குமார். ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முறையாக விவாகரத்து செய்யாமல் இருந்த திருமணத்தை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், முதல் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது கணவர் சுஷில் குமார் மீது காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே, தன்னை விடுதலை செய்யக் கோரி சுஷில்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம் நிராகரித்த சூழலில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது நீதிபதி ராகுல் சதூர்வேதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு அவர் கூறியதாவது:
வெளிநாடுகளை ஒப்பிடும் இந்தியப் பெண்கள் தங்கள் கணவர்கள் மீது அதீத அன்பை வைத்துள்ளனர். தங்கள் கணவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது, தனது கணவர் வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்பது இந்தியப் பெண்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு கூட அவர்கள் சென்று விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட வழக்கிலும் இதுதான் நடந்துள்ளது. சுஷில்குமார் வேறு திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாமல்தான் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த வழக்கில் அவரை விடுதலை செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM